

காலை ஜெபம்
***MORNING PRAYER***
"ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்".
(திருப்பாடல் 118: 1,14-15. 16,18-21 )
எல்லாம் வல்ல இறைவா! உம்முடைய திருநாமம் பரிசுத்தம் என போற்றுகின்றேன். என்னை முழுமையாக உமது பாதத்தில் வைக்கிறேன். கடந்த இரவு முழுவதும் பாதுகாத்த, உம் ஆசீருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
ஆண்டவரே, என் மன்றாட்டுகளை நீர் கேட்டதால், நான் உமக்கு என்றும் நன்றி செலுத்துவேன். நீர் என் வாழ்வில் செய்த அனைத்து அற்புதங்களுக்காகவும் நன்றி அப்பா. நீர் செய்த வல்ல செயல்களான நான் கண்டதையும், கேட்டதையும், பிறரிடம் எடுத்துரைக்காமலிருக்க என்னால் முடியாது. உம்மைப் பற்றி, உமது நற்செய்தியைப்பற்றி நான் பறைசாற்ற, தூய ஆவியின் துணையினை நீர் பேதுருவுக்கும், யோவானுக்கும் தந்தது போல, எனக்கும் தந்தருளும்.
இறைவா, இன்று விஷேசமாக பிறரால் வீண்பழி சுமத்தப்பட்டவர்கள், அவதூறு பேச்சுக்கு ஆளானவர்கள் ஆகியோருக்காக வேண்டுகிறோம். அவர்கள் படும் மனத்துயரினைக் கண்ணுற்று பாரும். அவர்களது கண்ணீரைத் துடைத்து, மனக்காயங்களை ஆற்றும். அவர்களுக்கு பொல்லாரினால் ஏற்பட்ட அவப்பெயரினை நீக்கியருளும்.
இறைவா! இந்த நாள் முழுவதும், உம்முடைய மகிமையை காணும்படியாக செய்வீராக. உம்மோடு உமக்காக வாழவும், என் வாழ்விலும் , தாழ்விலும் உம்மை மட்டுமே அன்புசெய்ய அருள்புரியும்.
இயேசு மரி! சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.