

***காலை ஜெபம்***
***MORNING PRAYER***
திருப்பாடல் : 23
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
(திருப்பாடல் 23: 1-6)
ஜெபம்
எல்லாம் வல்ல எம் இறைவா! உம் திருமுன் பணிந்து உம்மை ஆராதிக்கின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை அன்பு செய்கின்றோம். இறைவா! உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க உறைவிடமும் அளித்து எங்களை உமது பிள்ளைகளாக அரவணைத்து காத்து வருகிறீர். நன்றி தந்தையே!
ஆயினும் இறைவா, முன்பு நீர் எனக்கு அளித்தவற்றில் நான் மனநிறைவு கொள்ளாது பிறருக்கு உள்ளவற்றோடு ஒப்பீடு செய்து குறை கூறும் உள்ளத்தோடு இருந்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்துகிறேன். எனக்கு என்ன தேவை என்பதும், எப்போது தேவை என்பதையும் படைத்தவர் நீர் ஒருவரே அறிவீர் என்பதை உணராத நேரங்களுக்காக உம்மிடம் மன்னிப்புக் கேட்கிறேன். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி என்னை மன்னித்தருளும்.
வேலைக்கு அதிகாலையில் வந்தவருக்கும், மாலை ஐந்து மணிக்கு வந்தவருக்கும் ஒரு தெனாரியம் வழங்குவது என்பது எப்படி நிலக்கிழாரின் விருப்பத்திற்கு உட்பட்டதோ அவ்வாறே ஒவ்வொருவருக்கும் நீர் அருள்பவை உமது சித்தத்திற்கு உமது விருப்பத்திற்கு உட்பட்டது என்ற உண்மையை நாங்கள் உணரும்படி செய்தருளும். பிறரோடு ஒப்பீடு செய்தல், எதிலும் குறை காணும் நிறைவற்ற உள்ளம் இவற்றை எங்களிடமிருந்து முற்றிலும் அகற்றியருளும்.
இறைவா! இந்த நாளை ஆசீர்வதியும். நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்திலும் ஜெயத்தைத் தாரும்.
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.